தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்விகளை முன் வைத்த ப.சிதம்பரம்

பீகாரில் நவ.6-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.;

Update:2025-10-09 20:32 IST

புதுடெல்லி,

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. 7 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை ஆளப்போவது யார்? என்று தீர்மானிக்கப்போகிறார்கள். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பீகார் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் வாகுறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.

இந்தநிலையில், தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,

இந்திய தேர்தல் ஆணையத்தை நான் எந்த செயலுக்காகவும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. ஆனால், பீகார் வாக்காளர் பட்டியல் குறித்த சில கேள்விகளுக்கான பதில்களை இந்திய மக்களும், பீகார் மக்களும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.

* மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, பீகாரில் 18 வயதை பூர்த்தி செய்தவர்களின் மக்கள் தொகை எவ்வளவு?

* 18 வயதை பூர்த்தி செய்தோரின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேரின் பெயர்கள் பீஹார் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன? அது 90.7 சதவீதமா?

* மீதமுள்ள 9.3 சதவீத 18 வயதை பூர்த்தியடைந்த மக்கள் தொகையின் நிலை என்ன? அவர்கள் ஏன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை?

* வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை பெயர்கள் தகுதியில்லாதவை? அதன் எண்ணிக்கை 24,000 இருக்குமா?

* வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை வீட்டு எண்கள் காலியாக உள்ளன அல்லது தகுதியில்லாதவை? அந்த எண்ணிக்கை 2,00,000க்கும் அதிகமாக இருக்குமா?

* வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எத்தனை பெயர்கள் இரட்டை அல்லது நகல் பதிவுகள்? அந்த எண்ணிக்கை தோராயமாக 5,20,000 இருக்குமா?

* வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் தேர்தல் ஆணையம் (ECI) இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்