இரவில் கள்ளக்காதலனை வரவழைத்து மனைவி தனிமையில் உல்லாசம்: தொழிலாளி செய்த பயங்கரமான செயல்
சங்கர் வீட்டில் இல்லாத நேரம் மானஷா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.;
பெங்களூரு,
கள்ளக்காதலனுடன் செல் என்று கூறியபோதும், தினமும் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால் மனைவியை கொன்று, தலையை துண்டித்த தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார். இதனால் அவர்களது 4 வயது பெண் குழந்தை அனாதையாக தவிக்கிறது.
இதுபற்றி விவரம் வருமாறு:-
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சந்தாப்புராவை காச்சநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் பொம்மசந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மானஷா (26). இவர் ஹெப்பகோடியை சேர்ந்தவர்.
இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. முதலில் காச்சநாயக்கனஹள்ளியில் தங்கியிருந்த தம்பதி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சந்தாப்புரா ஹீலலிகே கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.
கணவர் வேலைக்கு சென்றபோது, மானஷா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மானசாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கர் வீட்டில் இல்லாத நேரம் மானஷா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
கடந்த 3-ந்தேதி இரவு பணிக்கு சென்ற சங்கர், மறுநாள் காலையில் வீட்டுக்கு திரும்பி வருவதாக மனைவியிடம் கூறினார். கணவர் காலையில்தான் வருவார் என்ற நினைப்பில், தனது வீட்டுக்கு இரவில் வருமாறு கள்ளக்காதலனை மானஷா அழைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அதே நேரம் வேலைக்கு சென்ற சங்கர், நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார். அப்போது மானஷா, தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சங்கர் அதிர்ச்சியில் உறைந்து போனார். மனைவி மற்றும் கள்ளக்காதலனை மடக்கி பிடித்து தாக்கினார்.இதன்பிறகு இனி நீ எனக்கு வேண்டாம் என்று கூறி கள்ளக்காதலனுடன் மனைவியை அனுப்பி வைத்தார். குழந்தையை மட்டும் சங்கர் தனது பாதுகாப்பில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்காதலனுடன் சென்ற மானஷா, அடிக்கடி வீட்டுக்கு வந்து சங்கரிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அதே போல வீட்டுக்கு வந்த மானஷா, சங்கரின் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இதில் கோபம் அடைந்த சங்கர், அரிவாளால் மனைவியின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
இருப்பினும் ஆத்திரம் தீராத சங்கர், மானஷாவின் தலையை துண்டித்து தனியாக எடுத்தார். துண்டிக்கப்பட்ட தலையை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்தார். இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்த சங்கர் மனைவி உடலை வீட்டிலேயே போட்டுவிட்டு நேற்று அதிகாலை தலை இருந்த பிளாஸ்டிக் பெட்டியை தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு சூர்யாநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
அங்கிருந்த போலீசாரிடம், எனது மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டேன் என்று கூறி சரண் அடைந்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சங்கரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த பெட்டியை கைப்பற்றினர். பின்னர் வீட்டில் கிடந்த உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டதால் அந்த தம்பதியின் 4 வயது பெண் குழந்தை பெற்றோரின்றி பரிதவித்து வருகிறது.கடன் பிரச்சினையால்தான் என் மகள் கொலை செய்யப்பட்டாள் மானஷாவின் தாய் சொல்கிறார்
தனது மகள் மானஷா கொலையானது குறித்து தாய் கிருஷ்ணவேணி கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு மானஷா தவிர. ஒரு மகனும் உண்டு. மகன் கோலாரில் வேலை பார்த்து வருகிறான். கணவர் இறந்துவிட்டதால், 2 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தேன். மானஷா குடும்பத்துக்கு உதவும் நோக்கில் திருமணத்திற்கு முன்பே வேலைக்கு சென்றார். அப்போது தான் சங்கருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கடன் பிரச்சினை தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நான் தான் சமாதானம் செய்து வந்தேன்.
கடனை அடைக்க முடியாமல், வீட்டை மாற்றி கொண்டே இருந்தனர். இந்த நிலையில் சங்கர், மானஷாவை கொலை செய்துள்ளார். தற்போது கடன் பிரச்சினையில் இந்த கொலை நடந்துள்ளது. இது தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.