கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.;

Update:2025-01-17 07:27 IST

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கனியானஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி தேஜஸ்வினி. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேஜஸ்வினிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் தேஜஸ்வினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் தேவராஜ் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் குடும்பத்தினர் தேஜஸ்வினியை கண்டுபிடித்து அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து தேவராஜூவிடம் சேர்த்து வைத்தனர். தேவராஜும் அனைத்தையும் மறந்து மனைவி தேஜஸ்வினியை ஏற்று கொண்டார். சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் தேஜஸ்வினிக்கும் கள்ளக்காதலுனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதனை அறிந்த தேவராஜ், கள்ளக்காதலை கைவிடும்படி தேஜஸ்வினியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவராஜ் நேற்று முன்தினம், தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி தேஜஸ்வினியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தேவராஜ், எச்.டி.கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறி சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எச்.டி.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்