தூத்துக்குடியில் ஆடுகள் திருடிய 2 பேர் கைது: கார், பணம் பறிமுதல்
தூத்துக்குடி திரவியரத்தின நகர், முருகேசன் நகர் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி திருட்டுப் போனது.;
தூத்துக்குடி திரவியரத்தின நகர், முருகேசன் நகர் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி திருட்டுப் போனது. இதில் 11 ஆடுகள் திருட்டு போனதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம், நேரு நகரை சேர்ந்த நாசர் மகன் அராபத் (வயது 29), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோபாலசமுத்திரம் அந்தோணி மகன் மோசஸ் மனோகரன்(26) ஆகிய 2 பேரும் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆடுகள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார் கைப்பற்றப்பட்டது.
மேலும் 11 ஆடுகளை திருடி விற்பனை செய்த பணம் ரூ.75 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அராபத் மீது ஒரு கொலை வழக்கும், 13 ஆடு திருட்டு வழக்குகளும் உள்ளன. மோசஸ் மனோகரன் மீது அடிதடி, ஆடு திருட்டு உள்பட 7 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.