அதிர்ச்சி சம்பவம்: பைக் மீது திடீரென மோதிய லாரி.. பேரனை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட பெண்

மடியில் வைத்திருந்த பேரனை ரோட்டோரம் வீசி காப்பாற்றிவிட்டு, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.;

Update:2025-08-08 07:57 IST

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்தவர், பெரியசாமி (வயது 45). இவர் தனக்கன்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேசுவரி (42). இவர்களுடைய பேரன் சிவ நித்திஷ் (3).

இவர்கள் 3 பேரும் நேற்று பைக்கில் கீழக்குயில்குடி வரை சென்று விட்டு அந்த பகுதி நான்கு வழிச்சாலையில் தங்களது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மொட்டமலை பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதியது. எப்படியும் விபத்தில் பலியாகி விடுவோம் என்று உணர்ந்து, சட்டென்று குழந்தையை தூக்கி சாலையோரத்தில் மகேசுவரி வீசினார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெரியசாமி தூக்கி வீசப்பட்டு காயத்துடன் ரோட்டின் ஓரத்தில் கிடந்தார். ஆனால் மகேசுவரி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக டிரைவர் ஓட்டிச் சென்றுவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, லேசான காயத்துடன் அலறிய குழந்தையை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேசுவரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பெரியசாமியையும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து லாரியுடன் தப்பிய டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்