ஒரு கட்சி தலைவர், தன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைப்பது, இதுவரைப் பார்த்திடாத ஒன்று - கனிமொழி எம்.பி.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.;

Update:2025-09-30 17:10 IST

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:-

கரூர் துயரச் சம்பவத்தில் பலர் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிற சூழலைத்தான் பார்க்கிறோம். எத்தனையோ குடும்பங்களில் தந்தையை இழந்திருக்கிறார்கள், குழந்தைகளை இழந்திருக்கிறார்கள், படித்துவிட்டு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைத்த அடுத்த தலைமுறையை இழந்திருக்கிறார்கள், அந்தக் குடும்பங்களில் இருக்கக்கூடிய கண்ணீரும் கதறலும் இன்றைக்கும் மறக்கமுடியாத சூழலைத்தான் பார்க்கமுடிகிறது.

ஒரு பத்து நிமிடம் வெளியில் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவர்கள் வரவில்லை. நாளை திருமணம் ஆகக்கூடிய சூழலில் இருந்தவர்கள் திரும்ப வரவில்லை. இந்தச் சூழலில் இருக்கும் குடும்பங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட மிக சோகமான சூழல்தான் அங்கு இருக்கிறது.

பலபேர் இன்னும் மருத்துவமனையில் காயங்களுடன், வலியுடன் போராடிக்கொண்டிருக்கிற சூழல் நிலவுகிறது. அன்று இரவே முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறார்கள். உடனடியாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்த அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பணித்திருக்கிறார்கள். அதைத் தாண்டி, பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகையையும் அறிவித்து அதை வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று முதல்-அமைச்சர் காணொளி வெளியிட்டிருக்கிறார்கள். இது யாரையும் பழி சொல்லக்கூடிய நேரமோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை. சமூக வலைதளங்களில் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என்று பெருந்தன்மையோடு பேசியிருக்கிறார்கள். ஏனென்றால், அந்த குடும்பங்களுடைய வலி, ரணம், காயம் இன்னும் இருக்கக்கூடிய நேரத்தில், நாம் தவறான விஷயங்களைச் சொல்லி, அவர்களுக்கு மேலும் மேலும் வேதனையை உருவாக்கக்கூடாது.

செய்தியாளர் கேள்வி: திமுக சதி செய்துவிட்டது என்று தவெகவினர் குற்றாம்சாட்டுகிறார்களே?

உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களோடு நின்றது திமுக அரசு. மனித உயிர்தான் முக்கியம், அடிப்படையில் அனைவரும் மனிதர்களாகச் செயல்படவேண்டும். யார் மீது குற்றம் என்பது விசாரணையில் தெரியவரும். யார் மீது தவறு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், அப்படிப்பட்ட சூழலில் ஒரு ‘blame game’ ஐ தொடங்குவது தவறான ஒன்று. அந்த நேரத்தில் நாம் மக்களோடு நிற்கவேண்டும், ஒரு கட்சியுடைய தலைவர் அந்த இடத்திலிருந்து ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் போவது, தன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைப்பது, நான் இதுவரைப் பார்த்திடாத ஒன்று. அதைத்தாண்டி, அவரால் இருக்கமுடியவில்லை என்றால் கூட அடுத்தக்கட்ட தலைவர்கள் மக்களோடு நின்றிருக்கவேண்டும்.

திமுக உள்ளிட்ட பிறக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் மக்களோடு நிற்கிறார்கள். அடுத்தக் கட்டத் தலைவர்களோ, மாவட்ட நிர்வாகிகளோ கூட மக்களை வந்து சந்திக்காமல், உதவிகளைச் செய்யாதிருப்பது மனிதாபிமானமற்ற செயல்.

செய்தியாளர் கேள்வி: ஆதவ் அர்ஜுனா வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக ஊடக பதிவிட்டாரே?

மக்களைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பைப் பற்றித்தான் இப்போது யோசிக்கவேண்டுமே தவிர, இன்னும் பிரச்னையைத் தூண்டுவது போல, வன்முறையைத் தூண்டுவது போல பேசுவது நிச்சயமாக உச்சக்கட்ட பொறுப்பின்மை. எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், சூழ்நிலையை அமைதியாக்குவது முதல் கடமை. எந்த இடத்திலும் வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில், இன்னும் உயிர்சேதத்தை, உயிர் இழப்புகளை உருவாக்கக்கூடிய பேச்சுகள் தவிர்க்கப்படவேண்டும். அதைத்தான் முதலமைச்சர் அவர்களும் காணொளியில் பேசியிருக்கிறார்கள். யாராக இருந்தாலும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் நினைப்பார்கள், யாரையும் குற்றம் சொல்லவேண்டிய நேரம் இதுவல்ல என்று சொல்லியிருக்கக்கூடிய வேளையில் மக்களைப் பற்றி கவலைப்படாமல், வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பேசுவது உச்சக்கட்டப் பொறுப்பின்மை. எப்படியாவது அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்று நினைப்பது மிகத் தவறான முன்னுதாரணம்.

செய்தியாளர் கேள்வி: சிபிஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்களே

ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைத் தொடங்கியிருக்கிறது. நேற்றே விசாரணையைத் தொடங்கிவிட்டார்கள். அதைத்தாண்டி எந்த விசாரணையை வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகள் கேட்கட்டும், அதில் நமக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்