ஏர்போர்ட் மூர்த்தி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2025-09-15 01:50 IST

சென்னை,

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 4 பேர் கடந்த 6-ந்தேதி தாக்குதல் நடத்தினார்கள். சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார்.

பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்தும் தாக்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீஸ் நிலையத்தில் இருதரப்பு சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் ஏர்போர்ட் மூர்த்தி மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதும் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை முயற்சி வழக்கும் பாய்ந்தது. இந்த வழக்கில் அவரை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வக்கீல்கள் அணி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்