பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்; அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு நோட்டீஸ்

7 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update:2025-08-18 12:15 IST

சென்னை,

புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டார். மேலும் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என சுமார் 4,000 பேர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்குழுவில் பா.ம.க. விதிகளில் திருத்தம் உள்பட மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய அம்சமாக, பா.ம.க. தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாசை தேர்வுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணி ராமதாஸ் மீது பொதுக்குழுவில் 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

முன்னதாக கட்சியின் நிறுவனர் ராமதாசால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இதன்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருவதால், யாருடன் நிற்பது என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு கூறுகையில், “பா.ம.க. பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோரது பதவிக்காலத்தைக் கடந்த 9-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்துள்ளோம். இதனால், தற்போது பா.ம.க. தலைவராக அன்புமணியே உள்ளார்.

கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்குமே பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் உள்ளது. அவர்கள் இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்டுவது செல்லாது. செல்லாத ஒரு பொதுக்குழுவைக் கூட்டி எந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும், அது பா.ம.க.வைக் கட்டுப்படுத்தாது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 7 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நோட்டீஸ் கிடைத்தாலும் எந்த பதிலும் அளிக்க போவதில்லை என அன்புமணி ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்