3 மாநில எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டமா? ரோந்து பணி தீவிரம்

கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-04-10 14:48 IST

சென்னை,

கடந்த 2017ல், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், எடக்கரை வனப் பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். அவர்களை, தமிழகம் மற்றும் கேரள மாநில மாவோயிஸ்ட் ஒழிப்பு படையினர் சுற்றி வளைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், அவர்கள் தப்பி விட்டனர். தொடர்ந்து சென்னையில் பதுங்கி இருந்த பண்ணைபுரம் கார்த்திக்கையும், ஓசூரில் சந்தோஷ்குமாரையும், தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல, கேரளாவில் வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதியிலும், கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியிலும், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தகவல் வந்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் சந்திக்கும் நீலகிரி முச்சந்திப்பு வனப்பகுதியில் 3 மாநில சிறப்பு காவல் படையினர் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2014 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த 3 மாநில படைகள் ரோந்துப் பணியின் போது, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது நடக்கும் ரோந்து கண்காணிப்பில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டறியப்படவில்லை. எனினும், கண்காணிப்பு தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்