ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற பாஜக பிரமுகர் கைது; ரூ. 22 லட்சம் பறிமுதல்
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.;
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுநகர் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த ஜெயராமன் (வயது 62), அவரது மனைவி மல்லிகா (வயது 55), மகன் சாரதி, புதுப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 44) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் 4 பேரும் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய 5 செல்போன்கள், லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ. 22 லட்சத்து 94 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில், கைது செய்யப்பட்ட ஜெயராமன் மீது 18 லாட்டரி வழக்குகளும், பிரகாஷ் மீது 3 லாட்டரி வழக்குகளும் உள்ளன. மேலும், பிரகாஷ் பாஜக பிரமுகர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.