தீவிரவாத செயல்களை தடுப்பதில் பாஜக அரசு படுதோல்வி: அமைச்சர் மனோ தங்கராஜ்

நாட்டின் பாதுகாப்பு என்பது அரசின் தலையாய கடமை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.;

Update:2025-11-12 07:09 IST

சென்னை,

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது பேஸ்புக் (முகநூல்) மற்றும் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டின் தலைநகர், செங்கோட்டை அருகே கார் வெடித்து 13 பேர் மரணமடைந்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. இத்தோல்விக்கு உள்துறை மந்திரி பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும். பாஜக அரசு தீவிரவாத செயல்களை தடுப்பதில் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. 2016-ம் ஆண்டு ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும்போது, தீவிரவாதிகளின் பணப்புழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டு, தீவிரவாதம் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

2016 உரி தாக்குதலில் 19 பேர் மரணம், 2019 புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் மரணம், 2025 பஹல்காம் தாக்குதலில் 45 பேர் மரணம், இப்போது மத்திய அரசின் கீழ் உள்ள காவல்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பில் 13 பேர் மரணம். பாஜக அரசு படுதோல்வி அடைந்திருப்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.

தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடந்து முடிந்த பின், நாங்கள் பழிக்கு பழி வாங்குவோம் என்று பிரதமர் சூளுரைப்பதை பார்க்க முடிகிறதே தவிர, நாட்டின் பாதுகாப்பு என்பது அரசின் தலையாய கடமை என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்