பா.ஜ.க.வின் சித்து விளையாட்டு: செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து திருமாவளவன் கருத்து

த.வெ.கவில் செங்கோட்டையன் இணைந்தது அவரது சொந்த விருப்பம் என்று திருமாவளவன் கூறினார்.;

Update:2025-11-29 20:03 IST

 கோவை :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

“பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ஆய்வு அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மீது உள்ள சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பும் போது, இதன் மீதான விவாதம் தீவிரமாக இருக்கும்.எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்யும் சூழல் உருவாகி இருப்பது கவலைக்குரியது. இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உறுதி செய்ய, இந்திய அரசு இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் உண்மையான பூர்வ குடிகளின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம். செங்கோட்டையன் அ.தி.மு.கவின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய அ.தி.மு.க சூழலில் அவரது நிலை அந்தக் கட்சிக்கு சாதகமானது அல்ல. த.வெ.கவில் அவர் இணைந்தது அவரது சொந்த விருப்பம். பா.ஜ.கவால் அ.தி.மு.க உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் த.வெ.கவுக்கு சென்றது பா.ஜ.க நடத்திய சித்து விளையாட்டின் விளைவு,” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்