கேலிபர், மருத்துவ உதவி... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கண்ணியத்துடனும், மரியாதையுடனும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, அவர்களின் நிலையை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் கண்ணியத்துடனும், உரிமைகளுடனும் வாழ்வதை உறுதி செய்வதற்காகவும் டிசம்பர் 3-ம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறன் கொண்ட அனைவருக்கும் இந்த நாளில் நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வாழ்வு வளம் பெற எனது விருப்பங்களைத் தெரிவிக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டிய திமுக அரசு, அவர்களுக்கு துரோகம் இழைக்கிறது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்குவதற்கான வாய்ப்புகளையும், அவர்களுக்காக சிறப்பு ஆள்தேர்வு முகாம் நடத்துவதற்கான வசதியையும் ஒற்றை அரசாணையின் மூலம் திமுக அரசு பறித்திருக்கிறது. இந்த நிலையை திமுக அரசு மாற்ற வேண்டும்.
காப்பீடு மூலம் கேலிபர் வழங்க வேண்டும், தொழு நோயில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இதை சாத்தியமாக்குவதுடன், மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய இந்த நாளில் சபதமேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.