பல்வேறு நலத்திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.;

Update:2025-08-01 14:43 IST

சென்னை,


* "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ் 14 நாடுகளை சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான தமிழ் பண்பாட்டுப் பயணம்

புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் "மரபின் வேர்களோடு" உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தமிழின் தொன்மை, தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், கட்டடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் போன்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான "வேர்களைத் தேடி" என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதல்-அமைச்சர் 24.05.2023 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர்.

அதன் அடிப்படையில், இந்த பண்பாட்டு பயணம் அயலகத் தமிழர் நலத்துறையினால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 நாடுகளைச் சேர்ந்த 194 தமிழ் இளைஞர்களைக் கொண்ட மூன்று கட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் நான்காம் கட்ட பயணமாக, பிஜி, ரீயூனியன், மார்டினிக், குவாடலூப், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, மியான்மர், மொரிஷியஸ், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் இன்று முதல் (1.8.2025) 15.08.2025 வரையிலான பதினைந்து நாட்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இப்பயணத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்தார். இப்பயணத்தில் பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள் அவர்களது நாட்டில் தமிழ்நாட்டின் கலாச்சார தூதுவர்களாக செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர்.



* சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்: திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் 6.94 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்களில் 11.50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, 91.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.



* தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு விருது

முதல்-அமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (1.8.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்று, கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இலாப பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு இவ்வரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் சர்க்கரை ஆலைகள் நலிவடைந்த நிலையிலிருந்து மீண்டு வருகின்றன.

புதுடெல்லியில் செயல்பட்டுவரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனம், ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை தேர்வு செய்து, விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் 2023-24 அரவைப் பருவத்தில், தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒட்டுமொத்த செயல்திறனுக்கான முதல் பரிசிற்கான விருதும், கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அபிவிருத்திக்கான இரண்டாம் பரிசிற்கான விருதும், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி மேலாண்மைக்கான இரண்டாம் பரிசிற்கான விருதும், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி மேலாண்மைக்கான மூன்றாம் பரிசிற்கான விருதும், செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தொழில்நுட்ப செயல்பாடுக்கான மூன்றாம் பரிசிற்கான விருதும், என ஐந்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விருதுகள் மற்றும் சான்றுகள் பெற்று சாதனை படைத்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இவ்விருதுகளை மாண்புமிகு சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மேலும், அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017-18 முதல் 2023-24 ஆம் ஆண்டுகள் வரையிலான தமிழ்நாடு அரசின் பங்குத் தொகைக்கு வழங்க வேண்டிய இலாப பங்கீட்டு ஈவுத்தொகையான 10.23 கோடி ரூபாயும் மற்றும் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை 2019-20 முதல் 2023-24 ஆம் ஆண்டுகள் வரையிலான தமிழ்நாடு அரசின் பங்குத் தொகைக்கு வழங்க வேண்டிய இலாப பங்கீட்டு ஈவுத்தொகையான 12.37 கோடி ரூபாயும், என மொத்தம் 22.60 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் அவர்களிடம் சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் இராஜேந்திரன் வழங்கினார்.

 * சுற்றுலாத்துறை


* சுற்றுலாத்துறையில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடத்தை முதல்-அமைச்சர்.மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.




 * தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (1.8.2025) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தூய்மை இயக்கத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாநிலத்திற்கான நிலையான கழிவு மேலாண்மை தீர்வுகளுக்கான நடிவடிக்கைகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அதிநவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும், அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க சென்னை - இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Indian Institute of Technology, Madras) இணைந்து செயல்படவுள்ளது.

இதற்காக, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் (CTCL) நிர்வாக இயக்குநர் மற்றும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவன இயக்குநருடன் புரிந்துனர்வு ஒப்பந்தம் இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.



* திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா

தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திருவண்ணாமலையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் அப்பகுதிகளில் வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசித்துவரும் மாவட்டங்களிலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சியடையவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்