காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.;

Update:2025-08-31 09:51 IST

சென்னை,

மத்திய அரசு கல்வித்தொகையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.பி.சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி. சிதம்பரம், லயன். டி.ரமேஷ், வக்கீல் சசிகுமார், கலில் ரகுமான், கங்கை குமார், வெங்கடேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காலவரையற்ற உண்ணாவிரதம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. தனது எம்.பி. அலுவலகத்தில் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிகாந்த் செந்தில் எம்.பி. உண்ணாவிரத போராட்டத்திலும் கணினி மூலம் அலுவல்களை கவனித்தார்.

அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில செய்தி தொடர்பு துறை தலைவர் கோபண்ணா, பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தின்போது திடீரென சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,சிகிச்சைக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் சசிகாந்த் செந்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து, மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரதம் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்