சென்னையில் நாசவேலை செய்ய சதி திட்டம்; பாகிஸ்தான் தூதரக அதிகாரி தப்பி ஓட்டம்
இலங்கையில் பாகிஸ்தான் தூதரக விசா அதிகாரியாக செயல்பட்டு வந்த அமீர் சுபைர் சித்திக் பாகிஸ்தானில் கராச்சியில் வசித்து வருகிறார்.;
சென்னை,
தமிழகத்தில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாச வேலைகளில் ஈடுபடுவதற்கு பயங்கரவாதிகள் தீட்டும் சதி திட்டம் அவ்வப்போது முறியடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது தமிழகத்தில் ஊடுருவி முக்கியமான இடங்களை புகைப்படம் எடுத்து நாசவேலையில் ஈடுபடுவதற்கு திட்டம் தீட்டு வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மண்ணடியில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் உளவாளியான ஜாகீர்உசேன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகளான சிவபாலன், ரபீக், சலீம் ஆகியோரும் பிடிபட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னை முத்தமிழ்நகரில் பதுங்கி இருந்த அருண் செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கியூ பிரிவு போலீசார் இவர்கள் 5 பேரிடமும் நடத்திய அதிரடி விசாரணையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நாசேலைக்கு சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இவர்களில் ஜாகீர் உசேன், அருண் செல்வராஜ் ஆகிய இருவரும் இலங்கையில் இருந்து சென்னை வந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணத்தோடு பதுங்கி இருந்தது அம்பலமானது. அவர்களது செல்போன், உள்ளிட்ட லேப்-டாப் வற்றை ஆய்வு செய்ததில் அதில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் புகைப்படம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அது தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி, அணுமின் மைய அலுவலகம், கல்பாக்கம் நிலையம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகம் ஆகிய இடங்களின் புகைப்படங்களையும் இவர்கள் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து வைத்து இருந்தனர்.
இது தொடர்பாகவும் 5 பேரிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்களில் நாசவேலையில் ஈடுபடுவதற்கு இந்த கும்பல் மிகப்பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணை என். ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இப்படி சென்னையில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்டதில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அமீர் சுபைர் சித்திக் என்பவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்ததது. கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 'அமீர் சுபைர் சித்திக்கையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேர்த்தனர். அவர் மீது 120-பி. 121-ஏ. 489-பி ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கையில் பாகிஸ்தான் தூதரக விசா அதிகாரியாக செயல்பட்டு வந்த அமீர் சுபைர் சித்திக் பாகிஸ்தானில் கராச்சியில் வசித்து வருகிறார்.
அவரை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு பிடிவாரண்டும் பிறப்பித்தது. ஆனால் அமீர் சுபைர் சித்திக் தொடர்ந்து தலை மறைவாகவே இருந்து வருகிறார். இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக பூந்தமல்லி கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கோர்ட்டு நடடிக்கையின் ஒரு பகுதியாக தப்பி ஓடி தலைமறைவாக உள்ள அமீர் சுபைர் சித்திக் வருகிற 15-ந்தேதி காலை 10.30 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்றும் சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.