தொடர் மழை எதிரொலி.. நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.;
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 17 மில்லி மீட்டர் மழை பதிவானது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 25 கனஅடி நீர் வருகிறது. நேற்று முன்தினம் 101.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் 4 அடி உயர்ந்து 105.65 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 115.48 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 3 அடி உயர்ந்து 118.83 அடியாக உள்ளது. மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,341 கனஅடி தண்ணீர் வந்தது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 98.76 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியது.
களக்காடு, சேரன்மாதேவி, அம்பை, நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்துள்ளது. எனினும் திருக்குறுங்குடி நம்பி கோவில், களக்காடு தலையணை செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது.
கொடுமுடியாறு அணை நிரம்பிய நிலையில் நேற்று அங்கு 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கு வரும் 320 கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடனாநிதி 58 அடியாகவும், ராமநதி 69 அடியாகவும், கருப்பாநதி 58 அடியாகவும், அடவிநயினார் 127 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது. இதைப்போல் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வருகின்ற 120 கன அடி தண்ணீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தில் 12 சென்டி மீட்டர், நாலுமுக்கில் 13 செ.மீ., காக்காச்சியில் 10 செ.மீ., மாஞ்சோலையில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.