தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு

புரட்சி உண்டாக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் பதிவிட்டநிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-09-30 19:10 IST

கோப்புப்படம்

சென்னை,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில் இந்த சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “என் தாயின் இழப்புக்கு பின்னர் கரூரில் என்னுடைய குடும்பத்தில் 41 பேரின் உயிரிழப்பு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கிறது. தற்போது எதையும் பேசக் கூடிய மனநிலையில் நான் இல்லை. இதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். விரைவில் கரூர் சென்று பொதுமக்களை சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும். வாழ்க” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 192 - கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு. 196(1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள். 197 (1) (d) இந்திய இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல். 353 (1) (b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது. 353 (2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில் ஆதவ் அர்ஜுனா மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளபதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டநிலையில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ்தளபதிவை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்