10-ம்தேதி வரை காலக்கெடு: அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை
மாமல்லபுரம் அருகே பண்ணை வீட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.;
கோப்புப்படம்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 17-ந் தேதி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும் அதற்கு அவர் 31-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து 1-ந்தேதி நடந்த கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், அன்புமணி மீதான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து, அதுபற்றிய விவரத்தை ராமதாசிடம் ஒப்படைத்தனர். இதனிடையே பா.ம.க.வின் புதிய உறுப்பினர் அட்டைகள், உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களில் அன்புமணி ராமதாசின் படம் நீக்கப்பட்டது, கட்சியினர் இடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தன் மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து 10-ந்தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் அறிவித்தார். மேலும் ஒரு வார கால அவகாசம் கொடுப்பது என்பது பேச்சுவார்த்தைக்குதான் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே பண்ணை வீட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். ராமதாஸ் தரப்பில் இருந்து விளக்கம் கேட்டு பதில் அளிக்க கால அவகாசம் வரும் 10-ம்தேதி வரை அளிக்கப்பட்ட நிலையில், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் மயிலம் சிவக்குமார், வெங்கடேசன், சதாசிவம் மற்றும் மாவட்ட செயலாளார்கள் உடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.