தீபாவளி பண்டிகை: சென்னையில் நாளை முதல் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நாளை முதல் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.;

Update:2025-10-15 19:39 IST

சென்னை,

சென்னையில் தீபாவளியை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம், கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் முனையம் மற்றும் மாதாவரம் புறநகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து செல்ல இப்பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் நாளை (16.10.2025) முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பஸ்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

2. கோயம்பேடு பஸ் நிலையம்

3. மாதவரம் புறநகர் பஸ் நிலையம்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பஸ் நிலையங்கள் /பகுதிக்கு மாநகர பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பஸ் நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பஸ்களை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பஸ்கள் நாளை முதல் 19-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்