காதல் திருமணம் செய்த மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.;
தக்கலை,
தக்கலை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 30), கொத்தனார். இவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஜேசு சவுந்தர்யா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
துரைராஜ் தனது குடும்பத்துடன் முட்டைக்காடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். மனைவி ஜேசு சவுந்தர்யா தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். துரைராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதியும் வழக்கம்போல் துரைராஜ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜேசு சவுந்தர்யா, கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தயார் வீட்டுக்கு பிள்ளைகளோடு சென்றுள்ளார்.
இதனையடுத்து பிள்ளைகளின் பாட புத்தங்களை எடுப்பதற்காக நேற்று முன்தினம் ஜேசு சவுந்தர்யா கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் கணவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது துரைராஜ் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.
இதுகுறித்து ஜேசு சவுந்தர்யா கொற்றிக்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.