தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி
தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் லாரி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பழுதானது.;
தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி, மேலத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 29), லாரி டிரைவர். இவரது லாரி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பழுதானது. இதனால் புதுக்கோட்டை அல்லிக்குளம் ஆண்டாள் தெருவை சேர்ந்த மங்களம் மகன் பட்டுராஜா(44) என்பவர் ஓட்டிவந்த லாரியில் இவரது லாரியை இரும்பு சங்கிலி மூலம் இணைத்து ஓட்டி வந்துள்ளார்.
புதிய துறைமுகம், மதுரை பைபாஸ் ரோடு தெர்மல்நகர் விலக்கு ரோட்டில் வரும்போது சங்கிலி அறுந்து விழுந்தது. இதனால் தமிழ்ச்செல்வன் லாரியில் இருந்து இறங்கி அதனை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லாரி அருகே நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அருகில் நின்று கொண்டிருந்த பட்டுராஜா பலத்த காயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தெர்மல்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவமணி தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்னறனர்.