தொடர் புகார் எதிரொலி.. தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை கிழக்கு மாவட்ட மகளிரணி பொறுப்பாளரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update:2025-05-21 15:08 IST

சென்னை,

சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 65-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கு.சாரதா. இவர், இந்த மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க. தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் அவர், தி.மு.க.வில் இருந்து இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி மாநகராட்சி 65-வது வார்டு கவுன்சிலரும், கிழக்கு மாவட்ட மகளிரணி வலைத்தள பொறுப்பாளருமான கு.சாரதா கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் தி.மு.க.அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவுன்சிலர் சாரதா, சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று மாநகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி கமிஷனரிடம் ஏற்கனவே புகார் மனு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்