மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

மின்கம்பம் மாற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-06-18 14:24 IST

கோப்புப்படம் 

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (36 வயது) என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தைக்கு கோவை மாவட்டம் நீலம்பூர் ஊராட்சி, முதலிப்பாளையத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை நிலத்தின் ஓரமாக மாற்றுவதற்காக செந்தில்பிரபு குறும்பப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.

அந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கான செலவு ரூ.50 ஆயிரத்தை தாண்டுவதால், அதற்கு செயற்பொறியாளரின் அனுமதி பெற வேண்டியதாக இருந்தது. எனவே அவர் சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜனை நேரில் சந்தித்துள்ளார். அவர் மின்கம்பம் மாற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செந்தில் பிரபு, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோமனூர் மின்வாரிய அலுவலகத்தில், ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாகப் பெற்ற, சபரி ராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்