பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை வேகம் எடுப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.;
FILEPIC
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக -பாஜக கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பிரச்சினைகளுக்காக அமித்ஷாவை சந்தித்து மனு அளித்தார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மத்திய மந்திரி அமித்ஷாவும் உறுதி செய்துள்ளார்.
அதே நேரத்தில் டெல்லி சென்ற அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனால் அதிமுகவில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பணிய வைப்பதற்காக பாஜக கட்சி செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாக ஒரு தரப்பினர்ர் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் அதிமுக உள்கட்சி விவகாரத்தை பெரிது படுத்தாமல் அமைதியாக இருக்குமாறு செங்கோட்டையனுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனால் அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனை சரி செய்யும் வகையில், வருகிற 6-ம் தேதி மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் கூட்டணி ஆகியவை பற்றி இருவரும் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனிடையே ஓ.பன்னீர் செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.