இளம்பெண்ணுடன் உல்லாசம்.. வேறொருவரை திருமணம் செய்த இளைஞர்.. கர்ப்பமான பெண் கதறல்
இரவு வரை வாட்ஸ் அப்பில் சேட் செய்து விட்டு, மறுநாள் வேறு பெண்ணை இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.;
பணிபுரியும் இடத்தில் மலர்ந்த காதல்
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த தேவிகா (29), 10 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மதுராந்தக தோட்டத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனால், கார்த்திக் முறையாக குடும்பத்தை கவனிக்காமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு, தேவிகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது, அதே நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த வையாவூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. தேவிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகத் தெரிவித்த போதிலும் சரத்குமார், அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பேசியதன் விளைவாக, தேவிகாவும் காதலில் விழுந்துள்ளார்.
கர்ப்பம்
இதையடுத்து இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்த இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் தேவிகா கர்ப்பமடைந்தார். அப்போது, கருவைக் கலைக்குமாறு சரத்குமார் வற்புறுத்தியுள்ளார்.
வேறொரு பெண்ணுடன் திருமணம்
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தேவிகாவுடன் பேசிக்கொண்டிருந்த சரத்குமார், திங்கட்கிழமை வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது அறிந்து தேவிகா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சரத்குமாரிடம் கேட்டபோது, அவரது குடும்பத்தினர் தேவிகாவை ஆபாசமாகத் திட்டி அனுப்பியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தேவிகா, சரத்குமார் மீது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார்.
நகை, பணத்தை கொடுத்தேன்..
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
”சரத்குமாரை நம்பி ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். மேலும், 3 பவுன் நகைகளையும் கொடுத்தேன். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனைத் தட்டிக்கேட்டதால் சரத்குமாரின் குடும்பத்தினர் என்னை மிரட்டுகின்றனர். சரத்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இழந்த பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
பேட்டி அளித்த பிறகு காவல் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றபோது தேவிகா அலுவலக வாசலில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.