இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் எச்சரிக்கை
விளம்பர தொழில்நுட்ப சந்தைக்கு பயனர்களின் தரவுகளை ‘கூகுள்’ நிறுவனம் தவறாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.95 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி) அபராதம் விதித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் அபராதம் நியாயமற்றது. இதுபோன்ற பாரபட்சமான நடவடிக்கைகளை எனது நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது. அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்யவில்லை என்றால், கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுப்பேன்” என எச்சரித்துள்ளார்.
தர்மஸ்தலா வழக்கு விவகாரம்: கர்நாடக எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தமிழக காங்கிரஸ் எம்.பி.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜனார்தன் ரெட்டி மீது சசிகாந்த் செந்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கங்காவதி தொகுதி எம்.எல்.ஏ. ஜனார்தன் ரெட்டி சில வாட்ஸ்அப் தகவல்களை வைத்துக் கொண்டு, தர்மஸ்தலா வழக்கில் என் பெயரை தொடர்புபடுத்தி பேசி வருகிறார். இந்நிலையில் பொது நலனுக்காகவும், எனது தனிப்பட்ட உரிமை அடிப்படையிலும் ஜனார்தன் ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்.
எனது மனு கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்படும். அதன் பின்னர் ஜனார்தன் ரெட்டி கோர்ட்டுக்கு வந்து என் மீது எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுகளை கூறினார் என்பதை அவர் விளக்க வேண்டும். இந்த வழக்கு வரும் 11-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. மேலும் என்னைப் பற்றி யாரேனும் அவதூறு பரப்பினால் அவர்கள் மீதும் இதே போல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத தி.மு.க. அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற தி.மு.க. அரசு முயன்று வருகிறது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.