இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025

Update:2025-09-06 09:31 IST
Live Updates - Page 2
2025-09-06 08:02 GMT

செங்கோட்டையன் விவகாரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை இணைந்து வீழ்த்தும் போரில், 2026 சட்டசபை தேர்தலில் முன்கள வீரர்களாக முன்னணியில் நிற்க வேண்டும் என உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன். நம்முடைய தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்த 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நாம் அடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

2-வது முறையாக ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவதற்கான கள பணியாற்றிட கட்சிக்கு அடுத்த 6 மாதங்கள் மிக முக்கியம் என்றும் அவர் பேசியுள்ளார்.

2025-09-06 07:27 GMT

இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை பற்றிய டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர். சில தருணங்களில் அவர் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவுகளை கொண்டுள்ளன.

இதுபற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவதுதான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன் என தெரிவித்துள்ளார். எனினும், இந்தியாவையும் ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என்றும் டிரம்ப் வருத்தம் வெளியிட்டார்.

டிரம்பின் இந்த பேச்சை வரவேற்கும் வகையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், இரு நாடுகளின் உறவை பற்றிய டிரம்பின் உணர்வுகளையும் மற்றும் நேர்மறையான மதிப்பீட்டையும் முழு அளவில் இந்தியா பிரதிபலிப்பதுடன் அவரை ஆழ்ந்து பாராட்டுகிறேன்.

இந்தியாவும், அமெரிக்காவும் நேர்மறையான மற்றும் முன்னோக்கி பயணிக்கும் விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய நட்புறவை கொண்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

2025-09-06 07:18 GMT

கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்: செங்கோட்டையன் கூறியது என்ன?

 கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக செங்கோட்டையனிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதவது;

”தர்மம் தலைக்க வேண்டும் என நினைத்தோம். எம்ஜிஆர். அம்மா வழியில் இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகள் வெளிப்படுத்தினேன். என்னை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள். பொறுப்புகளில் இருந்து வெளியேற்றியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2025-09-06 06:57 GMT

அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

2025-09-06 06:56 GMT

நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக கையாளவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக ஒன்றிணைய செங்கோட்டையன் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள். கெடுவுக்கு பின் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். எடப்பாடி பழனிசாமி மாறுவார் அல்லது திருத்தப்படுவார் என 4 மாதங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர் மாறுவதாக தெரியவில்லை.

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியில் அமமுக இருக்கும். தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் முடிவெடுப்போம். அரசியலில் எதுவும் நடக்கும். புதிய கூட்டணி உருவாகும்." என கூறினார்.

2025-09-06 06:43 GMT

திருச்சியில் விஜய் பரப்புரையை தொடங்கும் இடம் இது தான்....

தவெக தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது திருச்சியில் 2 இடங்களில் பரப்புரை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீரங்கத்துடன் சேர்த்து மற்றொரு இடத்தையும் உறுதி செய்த பின் காவல்துறையிடம் அனுமதி பெற்று பரப்புரை செய்யத் திட்டம் என கூறப்படுகிறது. 

2025-09-06 05:51 GMT

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-06 05:42 GMT

டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நடிகர் சரத்குமார் சந்திப்பு

டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நடிகர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகியான சரத்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சரத்குமாருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், அவருக்கு இதுவரை பொறுப்பு வழங்கப்படவில்லை.

இந்த சூழலில் மத்திய மந்திரி அமித்ஷாவை டெல்லியில் தனது ஆதரவாளருடன் சென்று சரத்குமார் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட சரத்குமார் திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

2025-09-06 04:51 GMT

வரலாற்றில் முதல் முறை.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை..! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.

9 நாட்களுக்கு பிறகு நேற்று முன் தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதாவது, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.9,865-க்கு விற்பனை செய்யப்பட்டது.

2025-09-06 04:43 GMT

மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் 9-ந்தேதி இந்தியா வருகை

மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் வருகிற 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 8 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து மூலோபாய நட்புறவை இன்னும் கூடுதலாக மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வார்.

இந்த பயணத்தில் மும்பை, வாரணாசி, அயோத்தியா மற்றும் திருப்பதி போன்ற நகரங்களுக்கு அவர் செல்ல உள்ளார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. மும்பையில் அவர் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்