ஆன்லைன் மேட்ரிமோனியில் திருமணம் செய்வதாக கூறி பண மோசடி அதிகரிப்பு: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை

ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் பார்த்து பேசி பழகும் நபர்களை நேரில் சென்று பார்த்து உறுதி செய்திட வேண்டும் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-20 00:00 IST

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆன்லைன் மேட்ரிமோனியில் (Online Matrimony) பார்த்து உங்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி தற்போது நூதனமான முறையில் பண மோசடி அனைத்து இடங்களிலும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனது திருமண வரனிற்காக ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சைட்டில் (Matrimony website) "மணமகள் தேவை" என பதிவு செய்து இருந்ததை பார்த்து அறிமுகம் இல்லாத பெண் மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பு கொண்டு, தான் உங்களது profile-ஐ மேட்ரிமோனி வெப்சைட்டில் பார்த்ததாகவும், உங்களை திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த பெண் நபர், தான் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாக கூறியும் தங்களை விரைவில் நேரில் பார்க்க உள்ளதாக கூறியதை உண்மையென நம்பி பல நாட்களாக மொபைல் போனிலே பேசி பழகி வந்துள்ளார்.

பின்னர் அந்த பெண் நபர் தன்னிடம் டிரேடிங் (Trading) மூலமாக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருகிறேன் என்றும் அதை நம் எதிர்கால வாழக்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறி அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார். எனவே இதுபோல் ஏமாறாமல் இருக்க ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சைட்டில் (online Matrimony website) வரன் பார்த்து பேசி பழகும் நபர்களை நேரில் சென்று பார்த்து உறுதி செய்திட வேண்டும். மேலும் டிரேடிங் (Trading) என்ற பெயரில் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்