செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

உபரி நீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்;

Update:2025-11-29 15:14 IST
கோப்புப்படம்

‘டிட்வா' புயல் இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை இன்று (சனிக்கிழமை) காலை அடைந்துள்ளது. சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் ஊடுருவும் ‘டிட்வா' புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை வந்தடையும். அவ்வாறு வரக்கூடிய ‘டிட்வா' புயல் சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்று அதன் நகர்வை பொறுத்து, அது எங்கே கரையை கடக்கும்? என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் இருந்து நீர் திறப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 1200 கன அடி திறக்கப்பட்ட நிலையில் தற்போது 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து புழல் ஏரியில்ம் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் உபரிநீர் தற்போது விநாடிக்கு 1200 கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பூண்டி ஏரியில் இருந்து 2500 கனஅடியாக திறக்கப்பட்ட உபரிநீர் தற்போது விநாடிக்கு 3000 கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் மாலை 6 மணி நிலவரப்படி, 3000 கன அடியில் இருந்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்