கன்னியாகுமரி: பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு
குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவரின் மகன் குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.;
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு காரித்தாஸ் காலனியை சேர்ந்தவர் ததேயூஸ், மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சுர்ஜின் (வயது 17) குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த வாரம் சுர்ஜின் கொட்டில்பாட்டை சேர்ந்த தனது நண்பர்கள் சகாய அஸ்வின்(17), ரிஜோ(17) ஆகியோருடன் பைக்கில் சென்றார். இந்த பைக்கை சுர்ஜின் ஓட்டினார். வெள்ளியாகுளம் பகுதியை சென்றடைந்த போது பைக் நிலைதடுமாறி சாலையோரம் நின்ற மரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சகாயஅஸ்வின், ரிஜோ ஆகியோர் குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் தலையில் பலத்த காயமடைந்த சுர்ஜினுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 12ம் தேதி இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.