லிவிங் டுகெதரில் 5 வருடம்: வேறு ஒரு பெண்ணை கரம் பிடிக்க காதலன் முயற்சி.. கடைசியில் நடந்த அதிரடி திருப்பம்
மீனாட்சி-பெரிய சாமி திருமணம் செய்யாமல் அம்பத்தூரில் தனியாக வாடகை வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் மீனாட்சி (வயது 28). இவர் சென்னை அரும்பாக்கத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரி ஊரான சிவகங்கை மாவட்டம் வெற்றியூருக்கு வந்திருந்தபோது அவரது வீட்டின் அருகே வசித்து வரும் மணிமாறன் என்பவரது மகன் சத்தியா என்ற பெரியசாமியுடன் பழக்கம் ஏற்பட்டது.நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. அதன் பின்பு பெரியசாமி அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலைக்கு சேர்ந்தார். இதனால் மீனாட்சி-பெரிய சாமி அம்பத்தூரில் தனியாக வாடகை வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பெரியசாமியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மீனாட்சியிடம், நான் ஊருக்கு சென்று பெற்றோரை சமாதானம் செய்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்றார். அதன்பிறகு அவர் சென்னைக்கு திரும்பி வரவில்லை.அவர் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும், அதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் மீனாட்சிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மீனாட்சி விராலிமலைக்கு சென்று பெண் வீட்டாரிடம் எடுத்துக் கூறி நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.அதன் பிறகு மீனாட்சியை அணுகிய பெரியசாமியின் குடும்பத்தினர் சமாதானம் பேசி கொள்வோம் என்று கூறி உள்ளனர். ஆனால் அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனிடையே மீனாட்சி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் செய்தார். புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெரியசாமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெரியசாமி, மீனாட்சியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் தனது பெற்றோர் மிரட்டுவ தாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மீனாட்சி-பெரியசாமியை சேர்த்து வைக்கும் முய்ற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.