மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் இளம்பெண் ஒருவர், வீட்டை காலி செய்யுமாறு தன்னை சிலர் மிரட்டியதாக தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.;
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும், சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்த ராமலட்சுமி மகள் உமா (வயது 31) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தர்ஷிக் முகுந்த்(9) என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராஜ் சாம்பவர்வடகரையில் தனது மாமியார் ராமலட்சுமியின் பெயரில் உள்ள வீட்டை பாட்டாகுறிச்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.
அந்த பணத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்ட கோவிந்தராஜ் அதன்பிறகு தனது மனைவியுடனான தகவல் தொடர்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உமா தனது தாயின் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் ராமலட்சுமி குறிப்பிட்ட பணம் கொடுத்து தனது வீட்டை மீட்பது குறித்து மகேந்திரனிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வீட்டை திருப்பித்தர மகேந்திரன் மறுத்துவிட்டார். இருதரப்பினரும் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
எனவே கோர்ட்டு மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு போலீசார் கூறிவிட்டனர். இதற்கிடையே வீட்டை காலி செய்யுமாறு தன்னை சிலர் மிரட்டியதாக தனது தாயிடம் உமா கூறி அழுதுள்ளார். மேலும் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்த உமா நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) தனது மகனுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இருவரும் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் தர்ஷிக் முகுந்த் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து உமாவின் தாயார் ராமலட்சுமி சாம்பவர்வடகரை போலீசில் புகார் அளித்தார். அதில், ‘‘வீட்டை காலி செய்யுமாறு எனது மகளை மகேந்திரன் உள்பட சிலர் மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.