மதுரையில் கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை - நீதிபதி தீர்ப்பு
மதுரையில் 21 கிலோ கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பு வழங்கினார்.;
2017 அக்டோபர் 14-ம் தேதியன்று கஞ்சா கடத்துவதாக மதுரை மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தீவிர வாகன தணிக்கை செய்தபோது பைபாஸ் ரோடு அருகே சந்தேகப்படும்படி அவ்வழியாக வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றியதோடு, அதை கடத்தி வந்த மதுரை திருவாதவூரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் ஐயம்பிள்ளை (வயது 58) என்பவரை கைது செய்தனர். பின்னர் செல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கின் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கின் சாட்சிகள் விசாரணை முடிவுற்று நேற்று (16.04.2025) தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார், இவ்வழக்கில் 23 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஐயம்பிள்ளை மீதான குற்றச்சாட்டுக்கள், சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகியதால், அவரை குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு 12 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட செல்லூர் காவல் துறையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.