சசிகாந்த் செந்தில் எம்பி 4-வது நாளாக உண்ணாவிரதம்; கண்டுகொள்ளாத காங்கிரஸ்

திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.;

Update:2025-09-01 08:59 IST

திருவள்ளூர்,

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டம் நேற்றுமுன்தினம் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தின்போது திடீரென சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை நேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. சந்தித்து நலம் விசாரித்தனர். ஆஸ்பத்திரியிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்ததால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், தொடர்ந்து சசிகாந்த் செந்திலை டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும் ஆஸ்பத்திரியின் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி எம்பி சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் இருந்தபடியே இன்றும் 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார். காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ள சசிகாந்த் செந்திலுக்கு தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியை அளிக்க வேண்டி சசிகாந்த் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்