வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு: மதுரை மேயர் ராஜினாமா: நாளை, புதிய மேயர் தேர்வு?

தி.மு.க. மேயர் இந்திராணி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.;

Update:2025-10-16 06:54 IST

கோப்புப்படம்


மதுரை மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த இந்திராணி (வயது 45) மேயராக இருந்து வந்தார். இவருடைய கணவர் பொன் வசந்த். இவர் தி.மு.க. நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் மாநகராட்சி நடவடிக்கைகளில் தலையீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது சில நேரங்களில் சர்ச்சையாகவும் மாறியது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட ஏராளமான சொத்துகளுக்கு வரியை குறைத்து மதிப்பீடு செய்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக முன்பு மாநகராட்சி கமிஷனராக இருந்த தினேஷ்குமார் விசாரணை நடத்தினார். அதில் முகாந்திரம் இருந்த நிலையில் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முன்னாள் உதவி கமிஷனர், பில் கலெக்டர், வருவாய் உதவியாளர் என பலர் இந்த புகாரில் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய பணியாளர்கள் பலர் பணியிடை நீக்கமும், தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

இந்த முறைகேட்டில் 5 மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் விஜயலட்சுமி, மூவேந்திரன் ஆகிய 7 பேரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ராஜினாமா செய்தனர். பொன்வசந்த் தூண்டுதலின் பேரில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கலாம் என கருதப்பட்டதால், அவரை கட்சிப்பதவியில் இருந்து தி.மு.க. தலைமை நீக்கியது.

200 கோடி ரூபாய் அளவுக்கு மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர் ரவி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மற்றொரு திருப்பமாக மேயரின் கணவர் பொன்வசந்த் சென்னையில் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்து இருந்தார். இதற்கிடையே வழக்கம்போல் மாநகராட்சி கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தி வந்தார். ஆனால், இந்த முறைகேட்டுக்கு மூலக்காரணம் மேயர்தான் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. போராட்டங்களையும் நடத்தின.

ராஜினாமா

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று மேயர் பதவியில் இருந்து இந்திராணி விலகினார். இதற்காக மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயனை சந்தித்தார். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை கமிஷனர் பெற்றுக்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

கைது நடவடிக்கையா?

பல கோடி ரூபாய் முறைகேடு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், அவை அனைத்தும் மேயருக்கு எதிராக அமைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கட்சி மேலிடம் அவரை ராஜினாமா செய்ய சொல்லி இருப்பதாகவும் தி.மு.க.வினர் கூறினர். அதே நேரத்தில் ஐகோர்ட்டு கண்காணிப்பதால், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இந்திராணி கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை, புதிய மேயர் தேர்வு?

மேயர் இந்திராணி ராஜினாமா செய்த நிலையில், அடுத்த மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. பெண் கவுன்சிலர்களில் ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்க போகிறது.

இதுசம்பந்தமாக தி.மு.க. கவுன்சிலர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, “மாநகராட்சி அவசர கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்கிறது. அதில் இந்திராணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு, புதிய மேயர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மதுரையில் தி.மு.க. மூத்த நிர்வாகியின் நெருங்கிய ஆதரவாளராக இருந்துவரும் பெண் கவுன்சிலர் உள்பட 7 பெண் கவுன்சிலர்களின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது” என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்