தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 260 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.;
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வசந்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான இளந்திரையன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளத்தில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 15 அமர்வுகளில் வழக்கு விசாரணை நடந்தது.
சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தாண்டவன், 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பிரீத்தா, பி.சி.ஆர். நீதிமன்ற நீதிபதி வஷீத்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜகுமார் மற்றும் பிற நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில், வங்கி வாராக்கடன் வழக்குகளில் 384 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 174 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மொத்த தீர்வுத் தொகை ரூ.4 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரத்து 836 ஆகும். மேலும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 876 வழக்குகளில் ரூ.15 கோடியே 60 ஆயிரத்து 65 ஆயிரத்து 681 மதிப்புள்ள 3 ஆயிரத்து 212 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
மொத்தம் 4 ஆயிரத்து 260 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.19 கோடியே 93 லட்சத்து 64 ஆயிரத்து 517 ஆகும். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான சுபாஷினி செய்திருந்தார்.