சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி

விரைவில் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update:2025-11-04 06:22 IST

சென்னை,

ரெயில்வே சார்பில் டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உதவியாளர் துணையுடன் செல்போன் யு.டி.எஸ். (எம்-யு.டி.எஸ்.) சாதனத்தை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வகையில், முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தின் மூலம், உதவியாளர்களின் துணையுடன் கையடக்க செல்போன் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் சாதனத்தைப் பயன்படுத்தி உடனடியாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். ‘எம்-யுடிஎஸ் உதவியாளர்' என்பவர், இந்திய ரெயில்வேயால் பணியமர்த்தப்பட்ட ஒரு தனிநபர் ஆவார்.

இவர், ரெயில்வே வழங்கிய கையடக்க எம்-யு.டி.எஸ். சாதனம் மற்றும் அச்சுப்பொறியைப் பயன்படுத்தி பயணிகளுக்கு டிக்கெட்டுகளை எடுத்துத் தருவார்கள். இதன் நோக்கம், வழக்கமான டிக்கெட் கவுண்ட்டர்களில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதும், பயணிகளுக்கு ஒரு விரைவான, வசதியான டிக்கெட் வழங்குவதும் ஆகும். முன்பதிவு செய்யப்படாத சாதாரணப் பயண டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் வழங்க முடியும்.

எனினும், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளையோ அல்லது சலுகை பரிமாற்றங்களையோ இவர்களால் வழங்க முடியாது. இந்த திட்டம் நாட்டின் பல்வேறு முக்கிய ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, தற்போது சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்