வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.;
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட மண்டல வாரியான திட்டப் பணிகளின் முன்னேற்றம், முன்னோடி திட்டங்களின் முன்னேற்றம், நடைபெற்று வரும் முக்கிய திட்டப் பணிகளின் முன்னேற்றம், அணைப் புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்ற விவரங்கள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் மற்றும் வெள்ளத் தணிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நீர்வளத்துறையின் பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் வெள்ளத் தணிப்புப் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன் மாநில நதிநீர்ப் பிரிவின் தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளர் ஸ்ரீதரன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், அனைத்து தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.