வடகிழக்கு பருவமழை: விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவவும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்;

Update:2025-10-21 17:42 IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள், மூத்த அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பருவமழை காலத்தில் தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் விரைவான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்

தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த சில நாட்களில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அவசியமெனில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரவும்.

மழையினால் ஏற்படக்கூடிய வெள்ளம், மின்சார ஆபத்து, மரம் சாய்வு போன்ற நிகழ்வுகளுக்குத் தயாராக மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக தங்கள் பகுதிகளிலே இருக்கவும்.

மக்களின் உயிர், சொத்துப் பாதுகாப்பே நமக்கு முதன்மையானது. எந்தவித சிக்கலும் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை அல்லது அவசர உதவி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளுவும்.

மழைக்காலத்தில் அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து விரைவான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். அந்தந்த பகுதியில் உள்ள காங்கிரஸ் பேரியக்கத்தினர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவிடுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்