6 கிராம் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை - காதை அறுத்து தோடுகளை பறித்த கொடூரம்

வீட்டின் வாசலில் தனியாக படுத்து இருந்த மூதாட்டியை மர்மநபர்கள் தலையில் அடித்துக்கொன்று 6 கிராம் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.;

Update:2025-10-20 16:34 IST

சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த வேம்படிதாளம் இந்திராநகர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த தங்கவேல் என்பவரது மனைவி மாரியம்மாள் (85 வயது). இவருடைய மகன் தனபால் (56 வயது). ரெயில்வே ஊழியரான தங்கவேல் பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். இதையடுத்து தனபாலுக்கு ரெயில்வேயில் வாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு சேலம் ரெயில் நிலையத்தில் ஊழியராக (கீமேன்) வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது தாயார் மாரியம்மாள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மூதாட்டி வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். மகன், மருமகள் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தனபால் நேற்று அதிகாலை எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது தனது தாயார் இடது பக்க தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வீட்டின் வாசலில் தனியாக படுத்து இருந்த மூதாட்டியை மர்மநபர்கள் தலையில் அடித்துக்கொன்று அவருடைய 2 காதுகளை அறுத்து தோடு, மூக்குத்தி என மொத்தம் 6 கிராம் தங்கநகை மற்றும் காலில் அணிந்திருந்த 200 கிராம் வெள்ளி காப்பை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்