ஈரோடு வ.உ.சி. பூங்காவில் புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் அகற்றம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக, பூங்கா சுத்தப்படுத்தப்பட்டது.;
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஈரோட்டை சுற்றி உள்ள ஏராளமானோர் இங்கு வந்து பொழுதை போக்கி செல்கின்றனர். இதனிடையே பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது.
காணும் பொங்கல் அன்று வ.உ.சி. பூங்காவுக்குள் ஏராளமான பெண்கள் கூடி ஆடிப்பாடி கொண்டாடுவர்கள். இதனால் பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி' நாளிதழில் பிரசுரமானது. சுத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பொக்லைன் எந்திரம் மூலம் ஈரோடு வ.உ.சி. பூங்காவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வளர்ந்திருந்த செடி, கொடி மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பெண்கள் கூறும்போது, ‘வ.உ.சி. பூங்கா தற்போது சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு உட்கார்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்க வேண்டும். சிறுவர்கள், சிறுமிகள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மீண்டும் செடி, கொடிகள் வளராமல் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும்' என்றனர்.