பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
செங்கோட்டையனின் ஆதரவாளரான சித்துராஜ், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ‘கெடு’ விதித்தார்செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசோனையில் ஈடுபட்டார் . தொடர்ந்து செங்கோட்டையன் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்களும் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி அறிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம், பல்வடம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் A. சித்துராஜ் அவர்கள், இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தம்பி (எ) கே ஏ சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி , கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தேவராஜ் , அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரமேஷ் , துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு (எ) மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மோகன்குமார் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஈரோடு புரநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை மாவட்ட கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, A.K. செல்வராஜ், MLA, (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்றும், கழக உடன்பிறப்புகள் அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.