வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள்: திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள்: அதிமுக கண்டனம்
ஆற்றில் கிடந்த மனுக்களை சேகரித்த போலீசார், இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.;
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் முகாம்கள் நடைபெற்று ஊரகப் பகுதிகளைப் பொறுத்தவரை 15 துறைகளின் வாயிலாக 45 சேவைகளும், நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகளும், வழங்கப்பட்டு வருகிறது.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார், இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்து வந்ததாகவும், ஆற்றில் மிதக்கும் மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அதன் சமூக வலைதள பக்கத்தில் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அந்த பதிவில், “பொதுமக்கள் அளித்த மனுக்களை தூக்கி எறிந்த திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.