தங்கத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் எனக்கூறி ரூ.90 லட்சம் மோசடி

இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update:2025-05-12 07:11 IST

கோப்புப்படம்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 37 வயது தொழிலதிபர். அவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி வாட்ஸ் அப் மூலம் ஒருவர் உரையாடலை தொடங்கினார். அவர் தன்னை ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை சம்பாதிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அந்த தொழிலதிபர் வாட்ஸ் அப் குழுவிலும் இணைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அதில் தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை எடுக்கலாம் எனக்கூறி அதற்கான விவரங்களை பகிர்ந்துள்ளனர். இதனை நம்பிய தொழிலதிபர் அதில் இருந்த லிங்குக்குள் சென்று தனக்கென ஐ.டி., கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கினார்.

தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வந்த தகவல்படி குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு 17 தவணைகளில் ரூ.90 லட்சம் பரிமாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் முதலீடு செய்த தொகைக்கான லாபத்தை எடுக்க முயன்ற போது 3 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். கூடுதல் கட்டணம் செலுத்த முடியாது என தொழிலதிபர் கூறியதை தொடர்ந்து, மேலும் கூடுதலாக ரூ.60 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

இதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் ஆன்லைன் மூலம் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்