தூத்துக்குடியில் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25.63 லட்சம் நிதியுதவி: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்
உடல் நலக்குறைவால் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு 2011-ல் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூ.25.63 லட்சம் பணம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.;
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் முகமது மைதீன் கடந்த 23.4.2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூ.25 லட்சத்து 63 ஆயிரம் பணம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அந்த பணத்தை நிரந்தர வைப்பு நிதி, காப்பீடு பத்திரங்கள் மற்றும் ரொக்கப் பணமாக நேற்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து 2011ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், முதல் நிலை காவலர் முகமது மைதீன் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.