மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எஸ்.பி வேலுமணி 2-வது நாளாக சந்திப்பு
இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.;
திருச்சி,
புதுக்கோட்டையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு நேற்று இரவு 8 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். பின்னர், பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி தொடர்பாக அமித்ஷா ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று இரவு 9.45 மணியளவில் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என கேட்டு அமித்ஷா ஒரு லிஸ்ட் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் ஒன்றரை மணி நேரம் வேலுமணி சந்தித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அமித்ஷாவை எஸ்பி வேலுமணி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக திருச்சி வரும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசக்கூடும் என்று கூறப்பட்டது. எனினும், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற தனது பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். இதனால் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை. இத்தகைய சூழலில்தான், வேலுமணி அமித்ஷாவை சந்தித்து பேசி வருகிறார்.