எந்த சிக்கல்கள் இருந்தாலும் மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது: தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்

எந்தவொரு குழந்தையும் பெற்றோர்கள் இல்லை என்று படிக்க வைக்காமல் இருக்கக்கூடாது என்று கலெக்டர் இளம்பகவத் கூறினார்.;

Update:2025-09-28 20:05 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் மிஷன் வத்சால்யா திட்டத்தில் பயன்பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடி, அவர்களின் எதிர்கால திட்டம் குறித்து கேட்டறிந்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது:

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் மிஷன் வத்சால்யா நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திட்டங்களை கண்காணிக்கவும், குழந்தைகளின் உடல் நலம் மற்றும் மன நலன் குறித்து ஆலோசிக்கவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் அக்குழந்தைகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 5 லட்சமும் மற்றும் PM cares for children திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு நிதி ஆதரவு தொகை, ஸ்காலர்ஷிப் மற்றும் பராமரிப்பு செலவு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மிஷன் வத்சால்யா நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 4,000 வழங்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.

உங்களுக்கு மருத்துவத்துறை சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மனநல திட்டம் சார்பில் உங்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கான முகாம் உங்களுக்காக இன்று நடைபெறுகிறது. இங்கு வந்திருக்கும் குழந்தைகளை தாத்தா, பெரியப்பா, பெரியம்மா போன்ற யாரோ ஒருவரது அறவணைப்பில் தான் வளர்வீர்கள்.

நீங்கள் இவர்களை வளர்ப்பதற்கு சிரமப்படுகிறீர்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரிகிறது. அதற்கு உதவி செய்வதற்காக தான் இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி கொடுக்கிறோம். இதை தவிர உங்களுக்கு வேறு சில சிக்கல்கள் இறுக்கிறதா, அல்லது மருத்துவ உதவி தேவைபடுகிறதா, மருத்துவ உதவி செய்ய முடியாத குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காக மருத்துவ முகாம் நடத்துகிறோம். மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கு ஏதாவது சிக்கல்கள் கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தர வழிவகை செய்யப்படும். குழந்தைகள் அனைவரும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். எந்தவொரு குழந்தையும் பெற்றோர்கள் இல்லை என்று படிக்க வைக்காமல் இருக்கக்கூடாது.

இந்த குழந்தைகள் அனைவரையும் உயர்கல்வியில் கொண்டு சேர்க்க வேண்டும். நமது மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளையும் உயர்கல்விக்கு சேர்ப்பதில் பெறும் முயற்சி எடுத்து வருகிறோம். அதில் பெற்றோர்களை இழந்த 25 குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களையும் உயர்கல்வியில் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். இந்த குழந்தைகளில் யாருக்காவது உயர்கல்வியில் சேர்வதற்கு சிரமம் இருந்தால் நிச்சயமாக மாவட்ட கலெக்டர் என்ற முறையிலும் நானும், எனக்கு பின்னாடி வருகின்ற எந்த கலெக்டராக இருந்தாலும் சரி அவர்களும் கண்டிப்பாக உங்களுக்கு படிப்பதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். நீங்கள் தயக்கம் இல்லாமல் நேரடியாக அவர்களிடம் கேட்க வேண்டும்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும் உள்ளது. மாவட்ட ஆட்சியரும் உங்களுக்கு ஒரு பாதுகாலவர் தான். உங்களுக்கு பாதுகாவலர் இருந்தாலும் உங்களை பாதுக்காக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் எங்களுக்கு சொல்லி இருக்கிறார். இந்த குழந்தைகளை உங்களால் பாதுக்காவோ அல்லது படிக்க வைக்க முடியவில்லை என்றால் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து உரிமையோடு கேட்க வேண்டும். திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வந்து கூட உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் கேட்கலாம்.

இங்கு சிறு குழந்தைகள் முதல் பட்டப்படிப்பு படிக்கும் குழந்தைகள் வரை உள்ளனர். அவர்களுக்கு படிப்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்க இங்கு அலுவலர்கள் உள்ளனர். சரியான வழிகாட்டுதல்களை கொடுக்கும் போது தான் கல்லூரி காலங்களில் ஒரு சரியான இடத்திற்கு சென்றடைய முடியும். குறிப்பாக 10ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளிலிருந்து என்ன உயர்கல்விக்கு போக வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டார்களா என்று இப்போதே குழந்தைகளை வழிகாட்டி கொண்டு சேர்க்க வேண்டும்.

பெற்றோர்கள் இல்லாவிட்டாலும் சரியான வழிகாட்டுதல் கிடைக்காமல் இருக்கக் கூடாது. இங்கு வந்திருக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிப்பவர்கள். வருங்காலத்தில் நீங்கள் நல்ல இடத்திற்கு சென்றடைவீர்கள். எந்தவொரு சிக்கல்கள் இருந்தாலும் சரி நிச்சயமாக உங்கள் பள்ளி படிப்பையோ, கல்லூரி படிப்பையோ நிறுத்தக்கூடாது என்பது என்னுடைய தாழ்வான வேண்டுகோள்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்