பயங்கரவாத அச்சுறுத்தல்; தமிழகத்திற்கு தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் - அண்ணாமலை
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பயங்கரவாதிகளை ஈர்க்கும் இலக்குகளாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;
கோவை,
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று கோவை மாவட்டம் நீலம்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
“தமிழகத்தின் பொருளாதார ஆற்றல் காரணமாக, மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம். பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்களை விட நாம் முன்னிலையில் இருக்கிறோம். சென்னை, கோவை உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பயங்கரவாதிகளை ஈர்க்கும் இலக்குகளாக இருக்கும்.
இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் சித்தாந்தங்களை தாண்டி ஒன்றிணைந்து இருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை பயங்கரவாத அச்சுற்றுதல் விவகாரத்தில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறப்பான அதிகாரிகள் எப்போதும் கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்களும், நானும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட பகுதிகள் பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கின்றன. டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு புல்வாமாவுடன் நேரடியாக தொடர்பு இருக்கிறது. நாம் பாகிஸ்தான் எல்லையை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறோம். சர்வதேச எல்லை என்றால் இலங்கையை தவிர வேறு யாரும் இல்லை. டெல்லிக்கு இருக்கும் அச்சுறுத்தல் சென்னைக்கு இல்லை என்றாலும் கூட, மற்ற மாநிலங்களை விட அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியம் தமிழகத்திற்கு இருக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.