2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி

எதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக செல்கிறார் என தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update:2025-07-19 21:55 IST

வேதாரண்யம்,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது பிரசார வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி கேட்கிறார்கள். 4 ஆண்டுகளாக திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றுகின்றனர். கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடன் வாங்கும் மாநிலமாக தமிழகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிவிட்டார். பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக அரசு நாகையில் எந்த பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மக்கள் விரும்பும் ஆட்சியை தந்ததால் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். ஆட்சியில் அமர்ந்த பிறகு மக்களைப் பற்றி தான் சிந்திக்க வேண்டும். மீனவர்கள், விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களைத் தந்தது அதிமுக அரசு. எதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக செல்கிறார் என தெரியவில்லை.

அதிமுக கூட்டணி வெற்றிக்கு மக்கள் கூட்டமே சாட்சி. 2026ல் மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் மாம்பழங்களை கொள்முதல் செய்ய கீழ்வேளூர் தொகுதியில் தொழிற்சாலை அமைக்கப்படும். மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டு வரப்படும். 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்